ஞாயிறு, 13 ஜூன், 2010

இன்று ஒரு தகவல்: திருபதி திருமலை வெங்கடேசா

திருப்பதி திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையானுக்கு தனியாகப் பெயரில்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்கு சொந்தக்காரர். அதன் உரிமையாளர், அதன் உடையவர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை, வட மொழியில் சொல்வதானால் வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது வேங்கடத்துக்கு உரிமையானவர் அல்லது ஈஸ்வரர் என்று பொருள். நினைத்ததை முடித்து வைக்கும் திருவேங்கடமுடயானின் அற்புதங்களை எழுதினால் நாட்கள் போதாது. போதாது என்பது நாட்கள் மட்டும் அல்ல, கவிஞர் கண்ணதாசன் சொல்வது போல எனக்கு ஒரு வாழ்நாள் மட்டும் போதாது. இந்த அற்புத தேய்வதை பற்றி நான் படித்த சில தகவல்களையும் , நான் பார்த்த சில பட தொகுப்புகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்





இந்த பரவச வெங்கடாஜலபதி பற்றியும் அவர் குடிகொண்டு இறக்கும் திருமலையின் பெருமை பற்றியும் இன்று சில தகவல்

மற்ற தெய்வங்கள் போல் வேங்கடமுடையானுக்கு தனி பெயர் கிடையாது.சுமார் 500 வருஷங்களாக தான் இவருக்கு சீனிவாசன் என்ற பெயர்

ஏழுமலையான் தானே அவதரித்த தம்பிரான் - சுயம்பு. தானே விரும்பி, சில ஸாமுத்ரிகா லக்ஷணங்களோடு தோன்றியிருக்கிறார்

திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும் என்போரும் உண்டு.

ஸ்தல புராணங்களில் பழமையானது வேங்கடாஜல மஹாத்மியம் ஆகும். இது 1491 ஆம் ஆண்டு மஸிண்டி வேங்கடதுரைவார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வராக, பத்ம, கருட, ப்ரம்மாண்ட, மார்கண்டேய, பவிஷ்யோத்ர, ஸ்கந்த, ஆதித்ய, வாமன, ப்ரம்மம் ஆகிய பத்து புராணங்களிலிருந்து வேங்கடேஸர் பற்றிய செய்திகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது




திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்து 250 கோடி வருடங்கள் ஆகின்றன என்று அறிவியல் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

திருவேங்கடமுடையானின் கோவிலிலிருந்து, ஈஸான்ய திக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சில பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள்.

இறைவனின்  திருமேனிக்கு பச்சை கற்பூரம் சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை.






எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை.

இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன.

இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது. வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது.


திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகவும் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன


ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப்படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்


ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல்சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்


உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.


ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி


 மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்


ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்


ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.


வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் பறிக்கும் அழகோடு இருப்பார்


திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

1 கருத்து: